The only acupuncture clinic operating in major metropolitan cities like chennai bangalore hyderabad and madurai in India

Without medicine, Root cause cure for - Diabetes, Blood pressure, Thyroid, Obesity, Eye disorder, Infertily, Skin problems

தூய்மையும், நிறைவும் தரும் சாத்வீக உணவுகள்!

உணவே உடலாகிறது, உணவே மனமாகிறது, நாம் உண்ட உணவுகளும், நமது எண்ணங்களும் தான் நாமாக இருக்கிறோம். இந்த மகா பிரபஞ்சத்தின் ஒரு சிறு துளி நாம். இப்பிரபஞ்சத்தில் இருந்து தான் நாம் அனைத்தையும் உள்வாங்கிக்கொள்கிறோம். அவற்றில் நாம் உண்ணும் உணவுகள் பிரதானமானவையாகும். உணவைபற்றிய தெளிவு யாரிடம் நிரம்பியிருகிறதோ, அவரிடமே வாழ்க்கை பற்றிய தெளிவும் நிரம்பியிருக்கும்.

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, இந்திய கலாச்சாரமானது உணவைப்பற்றிய தெளிவை ஆழமாக உணர்ந்து அதனடிப்படையில் தங்களது வாழ்வை அமைத்துக்கொண்ட பெரும் கலாச்சாரமாகும். நம்முடைய முன்னோர்கள் நாம் உண்ணும் அனைத்து உணவுகளையும் மூன்று பாகங்களாக பிரித்து, அவைகள் ஒவ்வொன்றும் நமக்குள் ஏற்படுத்தும் விளைவுகளையும் பட்டியலிட்டு வைத்திருந்தார்கள்.

அவற்றை நாம் “முக்குண உணவுகள்” என அறிகிறோம்.

1. சாத்வீக உணவுகள்
2. ரஜஸ் உணவுகள்
3. தாமஸ உணவுகள்

ஒவ்வொரு வகையான உணவுகளும் நமக்குள் ஒவ்வொரு விதமான குணத்தை தூண்டுகின்றன. இந்த முக்குண உணவுகளைப்பற்றிய அறிவு நமக்குத் தெளிவாக இருக்குமானால், நம்முடைய வாழ்வில் நாம் மிகப்பெரிய ஒரு ஞானத்தைப் பெற்றிருக்கிறோம் என்றே அர்த்தம்.

சாத்வீக உணவுகளின் குணங்கள்

சுவையும் அளவும் தரமும் மிதமானதாக இருக்குமானால் அதனை சாத்வீக உணவு என்று கொள்ளலாம். பெரும் ஞானிகளும், துறவிகளும், ஆன்மீக நாட்டம் கொண்டவர்களும் இயற்கையாகவே இவ்வகை உணவுகளையே நாடுகின்றனர்.

அமைதியான மனம், நடுநிலை மனப்பான்மை, பிறருக்கு தீங்கு செய்யாமை, அன்பும், அறமும் நிறைந்த மனம், உண்மையும் பண்பும் நிறைந்த செயல்கள், தியானம் மற்றும் ஒருநிலைப்படுதலில் ஆர்வம் போன்றவை சாத்வீக உணவுகளின் குணங்களாகும்.

பொதுவாக சொன்னால் தூய்மையும், நிறைவும், அமைதியும், அன்பும் நிறைந்த மனத்தை கொண்ட இணக்கமான மனிதர்களாக விளங்கசெய்வது சாத்வீக உணவுகளின் இயல்பாகும்.

எவையெல்லாம் சாத்வீக உணவுகள்

பசும்பால், தயிர், வெண்ணெய், நெய், பாலாடை போன்ற பால் பொருட்கள். . .

சுக்கு, மிளகு, வெள்ளை மிளகு, திப்பிலி, இஞ்சி, சீரகம், குங்குமப்பூ, வெந்தயம், எள், உளுந்து, அவல், பொரி, பச்சைப்பயறு, திணை போன்றவைகள். . .

ஆப்பிள், வாழைப்பழங்கள், அத்திப்பழம், எலுமிச்சை பழம், திராட்சை, நாவல் பழம், பலாப்பழம், விளாம்பழம், கிச்சிலிப்பழம், உலர் திராட்சை, முலாம்பழம், பேரீச்சம் பழம், தக்காளி, சப்போட்டா, மாதுளம்பழம், பப்பாளிப்பழம், கொய்யாப்பழம், மாம்பழம், ஆரஞ்சு, பேரிக்காய், அன்னாசி போன்ற பழ வகைகள். . .

கொடியில் காய்க்கும் எல்லா காய்வகைகளும், கேரட், சாம்பல் பூசனி, வெண் பூசனி, சக்கரைவள்ளிக் கிழங்கு, கீரைகள், முட்டை கோசு, சேப்பங்கிழங்கு, வேப்பம்பூ, கறிவேப்பிலை, தூதுவளை, பிரண்டை, வாழைத்தண்டு, சுண்டைக்காய், தேங்காய், நெல்லிக்காய், வெள்ளரிக்காய், இலந்தைப் பழம், பலாக்காய், கத்தரிக்காய் போன்ற காய் வகைகள். . .

தேன், கற்கண்டு, கரும்பு சாறு, பாதாம் பருப்பு, இளநீர், பாயிசம், தேங்காய் நீர் போன்றவைகள். . .

இவை அனைத்தும் சாத்வீக உணவுகளாக அறியப்படுகின்றன. . .

ரஜஸ் உணவுகளைப்பற்றி அடுத்த கட்டுரையில் . . .

 

Artilce by: www.yogasamudram.in for ACUAROGYA